40 ஆண்டுகளுக்கும் மேலாக வட சென்னையின் எருக்கஞ்சேரி பகுதியில் விழிம்பு நிலை மக்களுக்கு இலவசமாகவும், 5 ரூபாய் கட்டணத்துக்கும் சிகிச்சை அளித்து வந்த மனிதநேய மருத்துவர் திருவேங்கடம் மாரடைப்பால் காலமானார்.

மெர்சல் படத்தில் ஏழைமக்களுக்கு 5 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக விஜய் நடிப்பதற்கு நிஜத்தில் முன் உதாரணமாக இருந்தவர் மருத்துவர் திருவேங்கடம்..!

அரசு மருத்துவராக இருந்த போதும் சரி, பணி ஓய்வு பெற்ற பின்னரும் சரி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வட சென்னையின், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதியில் விளிம்பு நிலையில் வாழுகின்ற ஏழை எளிய மக்களுக்கு கட்டணமின்றி மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் திருவேங்கடம்.

மூத்த மருத்துவர்கள் எல்லாம் ஓய்வுக்கு பின்னரும் கூட தனியார் மருத்துவமனைகளின் பணிக்கு சேர்ந்து நோயாளிகளை சந்திக்க ஒரு சிட்டிங்கிற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் பெற்றுவரும் நிலையில், பல புற்று நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை முறைகள் குறித்த வழிக்காட்டுதல்களை வழங்கி குணப்படுத்தியவர் மருத்துவர் திருவேங்கடம்.

பணம் கொடுக்கும் அளவுக்கு வசதியுள்ள நோயாளிகளிடம் கடைசியாக இவர் பெற்ற அதிகபட்ச கட்டணம் வெறும் 5 ரூபாய் மட்டுமே..! அதனால் தான் வட சென்னை மக்கள் இவரை 5 ரூபாய் டாக்டர் என்று வாழ்த்துகிறார்கள்.

இந்த நிலையில் மருத்துவ சேவையால் ஆயிரக்கணகான இதயங்களை வென்ற 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவர் மறைவுச்செய்தி அறிந்து வேதனை அடைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான மனைவி மற்றும் மருத்துவதுறையில் உள்ள மகள் மற்றும் மகனுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்ததால் தான் திருவேங்கடத்தால் மருத்துவத்தை சேவையாக செய்யமுடிந்தது என்கின்றனர் அப்பகுதி மக்கள்..!

அதிகப்படியான வியாபாரமாகிவிட்ட தற்போதைய மருத்துவ உலகில் ஏழை எளியோருக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை அளிக்க கூடிய மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்பதே மருத்துவர் திருவேங்கடத்தின் கனவாக இருந்தது..! என்கின்றனர் அவரது உறவினர்கள்.

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைந்தாலும் அவரால் உடல் நலம் பெற்ற ஏழை எளியோரின் வாழ்த்துதலால் காலமெல்லாம் அனைவரது உள்ளத்திலும் வாழ்வார்..!