பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கைசுவாசம் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பியின் நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதும் இல்லை. நாம் சண்டை போட்டாலும், இல்லாவிட்டாலும் நம் நட்பு என்றும் பிரிந்ததில்லை. அதனை நீயும் நன்றாக அறிவாய். நான் உனக்காக பிரார்த்திக்கிறேன். நீ விரைவில் மீண்டு வருவாய் என சோகம் படிந்த குரலுடன் பேசியுள்ளார்.