தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் ஒரு முகாம் அருகே உள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி, தண்ணீர் கலந்த கெரசின் வழங்கப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.

திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழர்கள் முகாம் 1992ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் பகுதி ஒன்று. இரண்டு, மூன்று என உள்ளது. இதில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதம்தோறும் அரசு வழங்கும் இலவச அரிசி மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 12 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது. இதில் 20 கிலோ போக கூடுதலாக அந்த குடும்பத்திற்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையின்படி வழங்கப்படும் அரிசிக்கு கிலோ ஒன்றுக்கு 75 பைசா வீதம் வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி பழுப்பு நிறத்திலும், கருப்பு அரிசிகள் அதிக அளவிலும் கலந்துள்ளது. இதனால் அதனை எப்படி சமைத்து சாப்பிடுவது? இது மிகவும் சிரமமாக உள்ளது என்று குற்றம் சாட்டியதோடு வேறு அரிசியை மாற்றி தர வேண்டுமென ரேஷன் கடை ஊழியரிடம் முறையிட்டனர்.

அதற்கு அவர் இந்த அரிசிதான் உள்ளது என்றுள்ளார். மேலும் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்யில் தண்ணீர் கலந்து இருப்பதாகவும், இதனால் மண்ணெண்ணெய் ஸ்டவ்களில் ஊற்றி எரிய வைக்கும் போது சரிவர எரிவதில்லை எனவும் பகுதி மக்கள் கூறினர்.

இது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டபோது, அரிசி கொஞ்சம் பழுப்பு நிறமாகவும், கருப்பு அரிசி கலந்தும்தான் உள்ளது. இது தங்கள் கடைக்கு மட்டும் வரவில்லை என்றார். மேலும் ஒரு மாதத்திற்கு 14 ஆயிரம் கிலோ முதல் 15 ஆயிரம் கிலோ வரை அரிசி வருவதாகவும் தெரிவித்தார்.

ரேஷன் கடையில் ஏதாவது பிரச்னை இருப்பினும், இவர்கள் சம்பந்தப்பட்ட முகாம் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். என்னிடம் வந்து பிரச்னை செய்கிறார்கள். நான் என்ன செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.