சிங்கப்பூரில் வாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் வீல்சேரில் பெரிய வணிகவளாகத்துக்கு வந்து பொருட்களை வாங்க முயன்ற நிலையில் அவரை சிலர் பிச்சைக்காரர் என நினைத்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது.

Wesley Wee என்ற 40 வயது நபர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அவரால் சரியாகவும் பேசமுடியாது.

எங்கு சென்றாலும் Wesley வீல்சேரில் தான் செல்வார்.

அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் பெரிய வணிகவளாகத்துக்கு வீட்டு பொருட்களை வாங்க சென்றார்.

ஆனால் கடைக்காரர் அவரை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார், மேலும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் கடைக்காரர் சேர்ந்து Wesleyயை பார்த்து இங்கெல்லாம் யாரிடமும் பணம் கேட்டு பிச்சை எடுக்கக்கூடாது, இங்கு தொந்தரவு செய்யாமல் கிளம்பு என கூறி பிச்சைக்காரர் என நினைத்துள்ளனர்.

ஆனால் தான் பிச்சைக்காரன் இல்லை ஒரு எழுத்தாளர் என Wesley கூற முயன்றும் முடியவில்லை.

பின்னர் வேதனையுடன் தனது மனைவிக்கு போன் செய்து நிலைமையை கூறினார்.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த தனது நண்பருக்கு போன் செய்த Wesley மனைவி, அவருக்கு உதவும் படி கேட்டு கொண்டார்.

அங்கு வந்த நண்பர் பாதுகாப்பு அதிகாரி மற்றும் கடைகாரரிடம் அவர் பிச்சைக்காரர் இல்லை எழுத்தாளர் என கூறினார்.

இதை கேட்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒருசேர அடைந்த அவர்கள் தங்கள் செயலுக்கு Wesleyயிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

இதனிடையில் குறித்து வணிகவளாகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.