தென்னையைச் செழிக்க வைத்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்

0
176

“எங்களோட நிலத்து மண்ணு சத்தே இல்லாம இருந்துச்சு. மண்ணுல எப்பவும் ஈரத்தன்மையும் இருக்காது. அதனால, தென்னை மரமெல்லாம் சுணங்கியே இருந்துச்சு. ஒவ்வொரு மரத்துலயும் ஒரு வெட்டுக்கு எட்டுக் காய்தான் கிடைக்கும். ‘பசுமை விகடன்’ புத்தகம் மூலமா நம்மாழ்வாரோட ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்ச பிறகு, மரங்கள் நல்லா காய்க்க ஆரம்பிச்சது. இப்போ ஒரு வெட்டுக்கு 28 காய்கள் வரை கிடைக்குது” என்று சிலாகிக்கிறார்கள் சதாசிவம் மற்றும் சின்னதம்பி. தஞ்சாவூர் மாவட்டம், சூரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சகோதரர்கள். மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றும் சதாசிவம், பசுமை விகடன் இதழின் தீவிர வாசகர். டெல்லியில் வியாபாரம் செய்து வந்த சின்னதம்பி, விவசாயத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாகச் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, தென்னையில் வெற்றிகரமாக மகசூல் எடுத்து வருகிறார்கள்.

ஒரு மதிய வேளையில் இவர்களின் தென்னந்தோப்புக்குச் சென்றோம். மரத்திலிருந்து வெட்டிய காய்களை ஓரிடத்தில் குவித்துக்கொண்டிருந்தார்கள் இருவரும். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தங்களின் விவசாயம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார் சதாசிவம். “எங்க குடும்பத்துக்கு 14 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 5 ஏக்கர் நிலத்துல முந்திரி இருக்கு. அஞ்சு ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றோம். மீதி 4 ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. முழுக்கச் செம்மண் பூமி. ஆற்றுப்பாசன வசதியெல்லாம் கிடையாது. வறட்சியான பகுதி. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் இந்தப்பகுதியில தென்னை மரங்களே கிடையாது.

வறண்ட பகுதிங்கிறதால முழுக்க முந்திரிக்காடுகள் தான் இருக்கும். நாங்க போர்வெல் போட்டுத் தண்ணி கிடைச்ச பிறகு, ரெண்டு ஏக்கர்ல மட்டும் தென்னை நட்டோம். அப்போதே அக்கம்பக்கத்து விவசாயிகள் இங்க விளைச்சல் கிடைக்காதுனு சொன்னாங்க. ஆனா, நாங்க கேட்காம ஆசையில நட்டுட்டோம். அப்போதெல்லாம், எங்களுக்கு இயற்கை விவசாயம் பத்தி ஒண்ணும் தெரியாது. தென்னைக்கு ரசாயன உரங்களைத்தான் போட்டோம். மத்த விவசாயிங்க சொன்ன மாதிரியே நிறைய பிரச்னை வந்துச்சு. 2010-ம் வருஷத்துல ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம், நம்மாழ்வாரோட இயற்கை விவசாய வழிமுறைகளை ஓவ்வொண்ணா நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம்தான் ஓரளவு விளைச்சல் கிடைக்க ஆரம்பிச்சது” என்றார்.

தொடர்ந்து பேசிய சின்னதம்பி, “ரெண்டு ஏக்கர் நிலத்துல இருக்கிற தென்னை மரங்களுக்கு 20 வயசுக்குமேல ஆகுது. இந்த மரங்களுக்கு ஏழு வருஷமாத்தான் இயற்கை இடு பொருள்களைக் கொடுக்கிறோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு ஏக்கர் நிலத்துல தென்னை நடவு செஞ்சு ஆரம்பத்துல இருந்தே இயற்கை இடு பொருள்களைக் கொடுத்திட்டிருக்கோம். அதெல்லாம் இன்னமும் காய்ப்புக்கு வரல. முந்திரிக்கு எப்பவுமே ரசாயன உரம் பயன்படுத்துறதில்லை. இன்னமும் நெல்லைத்தான் முழுமையான இயற்கை முறைக்கு மாத்தலை. விவசாயம் போக, மூணு மாடுகளும், இருபது ஆடுகளும் வளர்த்திட்டிருக்கோம்.

ரெண்டு ஏக்கர் நிலத்துல 22 அடி இடைவெளியில மொத்தம் 178 மரங்களை நட்டோம். வாடல் நோய், சிவப்புக் கூண்வண்டு, வேர் கறையான்னு பாதிப்பு ஏற்பட்டு 36 மரங்கள் பட்டுப் போயிடுச்சு. எங்க தோப்புல குருத்துப்பூச்சி தாக்குதல் அதிகம். செலவு பண்ணி மரத்து மேல ஏறிப் பூச்சிக்கொல்லி வெச்சாலும் பலன் இருக்காது. ஒரு மரத்துல வருஷத்துக்குச் சராசரியா 56 காய் அளவுதான் கிடைச்சுட்டு இருந்துச்சு. அதுவும் சிறுத்துப் போய்தான் இருக்கும். இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகுதான் அதிகமாகக் காய்கள் கிடைக்க ஆரம்பிச்சது. இப்போ ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்குச் சராசரியா 180 காய்கள் வரை கிடைக்குது. காய்கள் நல்லா பார்வையா, தரமா இருக்கிறதுனால, ஒரு காய் சராசரியா 13 ரூபாய் அளவுக்கு விலை போகுது. அதே மாதிரி, ரசாயன உரம் போடுறப்போ அஞ்சு நாளுக்கு ஒருமுறை தண்ணி கொடுக்காட்டி மரங்கள் வாடிப்போயிடும்.

இப்போ பதினஞ்சு நாள் வரை தண்ணி கொடுக்காட்டியும் மரங்கள் வாடாம இருக்குது” என்ற சின்னதம்பி தங்களின் பராமரிப்பு முறைகள் குறித்துச் சொன்னார்.

“ஒவ்வொரு மரத்தோட தூர்ல இருந்தும் மூணு அடி தள்ளி, அரை அடி ஆழத்துக்கு அரைவட்டக் குழி எடுத்திருக்கோம். இதுலதான் இடுபொருள் கொடுக்கிறோம். பதினாறு லிட்டர் தண்ணிக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யாங்கிற விகிதத்துல கலந்து வெச்சு… பதினஞ்சு நாளுக்கு ஒரு தடவை ஒவ்வொரு மரத்துக்கும் ரெண்டு லிட்டர் அளவு கரைசலை ஊத்துறோம். அதனால, மரங்கள் செழிப்பா இருக்கிறதோடு நோய் எதிர்ப்புசக்தியோடும் இருக்கு.

முப்பது கிலோ மாட்டு எருவுல பதினஞ்சு கிலோ அளவுக்கு எருக்கு, ஆனைத்தழை இலைகளைக் கலந்து ஒவ்வொரு மரத்துக்கும் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கொடுக்கிறோம். அதேபோல, 6 மாசத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு மரத்துக்கும் 50 கிலோ ஆட்டு எரு கொடுத்துக்கிட்டிருக்கோம். நூறு மில்லி ஊமத்தங்காய் சாறோட, 15 மில்லி வேப்பெண்ணெய் கலந்து வேர்பகுதியில அப்பப்போ ஊத்திவிடுறதால வேர்க்கறையான் தாக்குதல் வர்றதில்லை.

முன்பெல்லாம் மூணு மாசத்துக்கு ஒருமுறை டிராக்டர் ஓட்டித் தோப்பை எப்பவும் சுத்தமா வெச்சிருப்போம். இயற்கைக்கு மாறின பிறகு, அப்படிப் பண்றதில்லை. தென்னை மட்டைகளைத் துண்டு துண்டாக வெட்டி மூடாக்குப் போட்டுடுறோம். அதனால, மண்ணுல ஈரப்பதம் இருந்துட்டே இருக்குது. இயற்கை இடுபொருள்கள் கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, நிலத்துல மண்புழுக்கள் அதிகமாகி இருக்கு” என்ற சின்னதம்பி நிறைவாக,

“நம்மாழ்வார் அய்யா, காட்டிய வழிமுறைகளால்தான் எங்களோட தென்னை இப்போ வளமாக வாழ்ந்துகிட்டு இருக்கு. அதுக்குப் பசுமை விகடனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
சின்னதம்பி,
செல்போன்: 84384 80396

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

பசுமை விகடன்-

NO COMMENTS

LEAVE A REPLY